கர்நாடகாவில் கோர விபத்து: லாரி மோதியதில் பேருந்து தீப்பிடித்து 6 பேர் உடல் கருகி பலி - பிரதமர், முதல்வர் இரங்கல்

2 mins read
a8589caf-9dda-49ee-9514-928c5130d39a
தேசிய நெடுஞ்சாலை 48ல் தனியார் ஆம்னி பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி, தீப்பிடித்து எரிந்தது. - படம்: இந்து தமிழ் திசை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே லாரி மோதிய விபத்தில், தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து கோகர்ணத்தை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புதன்கிழமை (டிசம்பர் 24) இரவு புறப்பட்டுச் சென்றது. இப்பேருந்து வியாழன் அதிகாலை சுமார் 2.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலை 48ல், சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிர்த்திசையில் வந்த லாரி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்தின் மீது மோதிய வேகத்தில் பேருந்து உடனடியாகத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இந்தக் கோர விபத்தில் 6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த தீக்காயமடைந்தனர்.

இதுகுறித்து கர்நாடக போலிசார் கூறியபோது, “விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்தில் மொத்தம் 29 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் குல்தீப் யாதவ் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்திற்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்றார்.

விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் கூறுகையில், “இரவு நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். விபத்து நடந்த உடனேயே பேருந்து ஓட்டுநரும், உதவியாளரும் பேருந்திலிருந்து கீழே குதித்துத் தப்பிவிட்டனர். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென்று பேருந்து முழுவதும் பரவியதால், உள்ளே இருந்த பயணிகளால் உடனடியாகத் தப்பிச் செல்ல முடியவில்லை,” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடியும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்,” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்