பண்டாரா: மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பண்டாரா மாவட்டம் லக்னி தாலுகாவில் உள்ள மானேகான், பிம்பல்கான் பகுதிகளுக்கு இடையே அதிகாலை 4 மணியளவில் பொலிரோ எஸ்யூவி கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக ஈச்சர் சரக்கு லாரி மீது அந்தக் கார் பலமாக மோதி விபத்துக்குள்ளானதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இவ்விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் பலியானதை அடுத்து, உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 53 வழியாக நாக்பூருக்கு வந்து கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

