பெரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியமான நிர்வாகி ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டம் மாம்தோட்டில் பகுதியில் அமைந்துள்ள சந்தைப் பகுதியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) மாலை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகியான 45 வயது குர்பிரீத் சிங் , காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் 22 வயது ஹர்பிரீத் சிங் என்பவரும் இருந்தார்.
அப்போது, இருவரையும் வேறொரு காரில் பின்தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென வாகனத்தை நிறுத்தி குர்பிரீத் சிங்கின் காரை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் குர்பிரீத் சிங், ஹர்பிரீத் சிங் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காயமடைந்த இருவரையும் உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், பரிசோதித்த மருத்துவர்கள் குர்பிரீத் சிங் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தீவிர காயமடைந்த ஹர்பிரீத் சிங் சிகிச்சைக்காக லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.


