ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தீவிரவாதிகளுடன் போராடி குதிரை சவாரி தொழிலாளியான சையது அடில் ஹூசைன் ஷா மாண்டார்.
வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 23) நல்லடக்கம் செய்யப்பட்ட அவரது உடலுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
சுற்றுப்பயணிகளை நோக்கி பயங்கரவாதிகள் ஏப்ரல் 22ஆம் தேதி தாக்குதல் நடத்தியபோது, குதிரை சவாரி தொழிலாளியும் உள்ளூர்வாசியுமான சையது அடில் ஹுசைன் ஷா, துணிச்சலாக அவர்களிடம் சண்டையிட்டார்.
ஆனால், அவர்களிடமிருந்து துப்பாக்கிகளைப் பறிக்க முயன்றபோது பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுற்றுப்பயணிகளைத் தவிர்த்து கொல்லப்பட்ட ஒரே உள்ளூர்வாசியும் இவர் தான். தம் உயிரையும் பொருட்படுத்தாமல், சுற்றுப்பயணிகளின் உயிரைக் காப்பாற்ற நினைத்து தன்னுயிர் நீத்த அவருக்கு, நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.