தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடும் வெப்ப அலை: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

2 mins read
995d159d-61fc-45ec-b8b8-4e2d32d297c2
இந்தக் கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலையும் குறைந்தபட்ச வெப்பநிலையும் வழக்கத்தைவிட கூடுதலாகப் பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் முன்னுரைத்துள்ளது. - படம்: இபிஏ

புதுடெல்லி: அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட கூடுதலாகப் பதிவாகும் என்றும் மேற்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் வெப்பநிலை வழக்கமான அளவில் இருக்கும் என்று அம்மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, குறைந்தபட்ச வெப்பநிலையும் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோடைக்காலத்தின் தாக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இப்போதே கடும் வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தின் கடந்த சில தினங்களாக 35 டிகிரி செல்சியசுக்கு குறையாமல் வெயில் பதிவாகி வருகிறது.

எனினும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் ஓரளவு குளிர் நிலவுகிறது என்பது ஆறுதல் தரும் தகவல்.

தொழில்நுட்ப தலைநகரமான பெங்களூருவில் வழக்கத்துக்கு மாறாக 35 டிகிரிக்கு மேல் வெயில் பாடாய்ப்படுத்துகிறது.

கேரளாவிலும் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை பதிவாகிறது. கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு என அனைத்து மாவட்டங்களிலும் வெயில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நாடு முழுவதும் வெப்ப நிலை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா.

“ஏப்ரல் - –ஜூன் மாதங்களில், இந்தியாவில் வழக்கமாக சில நாள்கள் வெப்ப அலை காணப்படும். ஆனால் இந்த ஆண்டு அது கூடுதலாக இருக்கும்.

“வழக்கமான ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 1–3 நாள்கள் வெப்ப அலைகள் இருக்கும் எனில் இந்த ஆண்டு அது 2–6 நாள்களாக அதிகரிக்கக்கூடும்,” என்றும் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கோடைக் காலத்தில் 9 முதல் 10 விழுக்காடு வரையிலான உச்ச மின்சார நுகர்வுக்கு இந்தியா தயாராக வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மே 30ஆம் தேதியன்று இந்திய அளவில் மின்சார தேவை 250 ஜிகாவாட் (GW) என்ற உச்சத்தை தொட்டது. இது அச்சமயம் இருந்த கணிப்புகளை விட 6.3% அதிகம் என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

எல் நினோ–தெற்கு அலைவு அடுத்த மூன்று மாதங்களுக்கும், பருவமழைக் காலத்திலும் நடுநிலையாக இருக்கும் என்றும் எல் நினோ உருவாக வாய்ப்பே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்