திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு தனது சொத்து, பணத்தை நன்கொடையாக வழங்கிவிடுமாறு ஒருவர் இறப்பதற்கு முன் உயில் எழுதி வைத்துள்ளார்
ஹைதராபாத் வனஸ்தலிபுரத்தில் வசித்த ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி ஒய்.வி.எஸ்.எஸ். பாஸ்கர் ராவ், ஏழுமலையானின் தீவிர பக்தர்.
தனது இறப்புக்கு பிறகு தனது வீடு மற்றும் சேமிப்புத் தொகையை ஏழுமலையானுக்கு வழங்க வேண்டும் என உயில் எழுதி வைத்திருந்தார்.
இந்த நிலையில் பாஸ்கர் ராவ் உடல்நலக்குறைவால் அண்மையில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது வீட்டுப் பத்திரம், வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் உயிலின் நகல் உள்ளிட்டவற்றை அவரது உறவினர்கள் வியாழக்கிழமை அன்று (ஜூலை 24) திருமலைக்கு வந்து தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரியான வெங்கைய்ய சவுத்ரியிடம் ஒப்படைத்தனர்.
காலஞ்சென்ற பாஸ்கர் ராவின் 3,500 சதுர அடி வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
அவர் தனது வங்கிக் கணக்கில் ரூ.66 லட்சம் சேமித்து வைத்திருந்தார்.
வீட்டை ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கும் சேமிப்புப் பணத்தை திருப்பதி தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் உயிலில் குறிப்பிட்டுள்ளார்.