வீடுகளுக்குத் தீவைப்பு: மணிப்பூரில் நீடிக்கும் கலவரத்தால் பதற்றம்

வீடுகளுக்குத் தீவைப்பு: மணிப்பூரில் நீடிக்கும் கலவரத்தால் பதற்றம்

1 mins read
975cf2c4-5d76-433e-b6c6-0829b8c60f80
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நூற்றுக்கணக்கான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.  - படம்: பிடிஐ

இம்பால்: மணிப்பூரில் நீடித்துவரும் கலவரத்தின்போது நூற்றுக்கணக்கான வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டன. இதனால் அங்கு பொதுமக்களின் நடமாட்டத்துக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மணிப்பூரில் அண்மையில் புதிய அரசு பதவியேற்ற மறு நாளே அங்கு வன்முறை வெடித்தது. பலர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டபோதும் கலவரம் முடிவுக்கு வந்தபாடில்லை.

அங்குள்ள குக்கி, மெய்டி பழங்குடிச் சமூகத்தினர் இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) இரவு குக்கி, தங்குல் சமூகங்களுக்கு இடையே புதிதாக மோதல் வெடித்தது. அப்போது லித்தான் கிராமத்தில் இருந்து எட்டுப் பேர் கடத்திச் செல்லப்பட்டதாக தங்குல் சமூகத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இரு சமூகத்தினரும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டதில் பலருக்குக் காயம் ஏற்பட்டது. அப்போது குக்கி சமூகத்தைச் சேர்ந்த, ஆயுதம் ஏந்திய குழுவினர் லித்தான் கிராமத்தில் உள்ள பல வீடுகளுக்குத் தீ வைத்ததுடன், அங்கிருந்த பலர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

வன்முறை வெடித்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டனர். கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசி போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர்.

மஹாதேவ், லம்பூய், ஷாங்காய், லித்தான் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக உக்ருல் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் தாஸ் தெரிவித்துள்ளார்.

சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்