இந்தியாவில் நிதிப் பிரிவுகளை ஒருங்கிணைக்கும் எச்எஸ்பிசி வங்கி: ஏஐ பயன்பாட்டால் ஆட்குறைப்பு அச்சம்

இந்தியாவில் நிதிப் பிரிவுகளை ஒருங்கிணைக்கும் எச்எஸ்பிசி வங்கி: ஏஐ பயன்பாட்டால் ஆட்குறைப்பு அச்சம்

படம்: புளூம்பெர்க்

27 Nov 2026 - 7:23 pm

2 mins read

புதுடெல்லி: செலவுகளைக் கட்டுப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டை விரைவுபடுத்தவும், இந்தியாவில் உள்ள தனது சில ஆதரவுச் செயல்பாடுகளை எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் (HSBC Holdings) ஒருங்கிணைத்து வருகிறது.

இந்தியாவில் சென்னை, குருகிராம், பெங்களூரு ஆகிய நகரங்களில் நிதிப் பிரிவு செயல்பாடுகளை மையப்படுத்தவுள்ளதாகவும், ஹைதராபாத், புனே உள்ளிட்ட பிற மையங்களில் அப்பணிகள் இனி இருக்காது என்றும் ஊழியர்களிடம் வங்கி அண்மையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள எச்எஸ்பிசியின் உலகளாவியத் திறன் மையங்களில் உள்ள நிதிப் பிரிவு பணிகளில் மட்டுமே இம்மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான பணியிடங்கள் பாதிக்கப்படலாம் என ஊழியர்கள் கருதுகின்றனர். பணியிட மாற்றத்திற்கான வாய்ப்பும் ஆதரவும் வழங்கப்பட்டாலும், அதற்கெனக் கூடுதல் நிதிச் சலுகைகள் வழங்கப்படாது எனத் தெரிகிறது.

தலைமை நிர்வாக அதிகாரி ஜார்ஜஸ் எல்ஹெடெரி பின்புல அலுவலகப் பணிகளைக் குறைக்க ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறார். இதனால் எதிர்வரும் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20,000 பணியிடங்கள், அதாவது மொத்த ஊழியர்களில் ஏறக்குறைய 10 விழுக்காட்டினர் பாதிக்கப்படக்கூடும்.

இந்தியாவில் ஏறத்தாழ 47,000 ஊழியர்களைக் கொண்டுள்ள எச்எஸ்பிசி, 2025ஆம் ஆண்டில் வரிக்கு முந்தைய லாபமாக 1.9 பில்லியன் அமெரிக்க டாலரை (S$2.45 பில்லியன்) ஈட்டியுள்ளது.

கடன் ஆவணங்களைச் சரிபார்த்தல், கணக்குகளை ஒப்பிடுதல் போன்ற பணிகளுக்கு ஏஐ பயன்படுத்தப்படுவதால், கோல்ட்மேன் சாக்ஸ், ஜேபி மோர்கன் உள்ளிட்ட பிற உலகளாவிய வங்கிகளும் இந்திய மையங்களை மாற்றியமைத்து வருகின்றன. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி நான்கு ஆண்டுகளில் சுமார் 8,000 ஆதரவுப் பணிகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. செயல்பாடுகளை எளிமைப்படுத்துவதன் மூலம் 2 பில்லியன் அமெரிக்க டாலர் செலவைச் சேமிக்க எச்எஸ்பிசி இலக்கு நிர்ணயித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்