வாரணாசி: இந்தியாவின் 2, 3ஆம் நிலையில் உள்ள சிறு நகரங்களை டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள அனைத்துலக விமான நிலையங்களுடன் எளிதாக இணைக்கும் புதிய ‘ஹப் அண்ட் ஸ்போக்’ போக்குவரத்து முறையை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்புதிய திட்டத்தின் முதல் சேவையை வாரணாசி விமான நிலையத்தில் ஏர் இந்தியா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.
இதன்மூலம், வாரணாசியில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்துலகப் பயணிகள், தங்களின் தொடக்கப் புள்ளியிலேயே (சிறு நகரம்) அனைத்துலகப் பயணத்திற்கான டிக்கெட், உடைமைகள், குடியேற்றச் சோதனைகளை ஒரே இடத்தில் முடித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால், சிறிய நகரங்களில் இருந்து புறப்படும் பயணிகள், டெல்லி போன்ற முக்கிய மையங்கள் வழியாக எவ்வித கூடுதல் அலைச்சலும் இன்றி உலகின் எந்த நாட்டிற்கும் எளிதாகப் பயணிக்க முடியும்.
வாரணாசியில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்ற அனைத்துலகப் பயணிகள், இந்த ‘ஈஸி கனெக்ட்’ வசதி மூலம் ஒரே விமானத்தில் டெல்லி வழியாகத் தங்களது பயணத்தைத் தொடங்கினர்.
“இந்த ‘ஈஸி கனெக்ட்’ விமானச் சேவைகள் வரும் மாதங்களில் சென்னை, அமிர்தசரஸ், அகமதாபாத், கோவா, கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்,” என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பெல் கூறினார்.
ஏர் இந்தியாவின் இந்தப் புதிய முயற்சி, சிறு நகரங்களைச் சேர்ந்த அனைத்துலகப் பயணிகளின் நேரத்தையும் சிரமத்தையும் பெருமளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

