பொதுச் சுகாதாரத்தில் மாபெரும் மாற்றம்: மோடி

பொதுச் சுகாதாரத்தில் மாபெரும் மாற்றம்: மோடி

1 mins read
ddb73ce5-493c-44ec-8253-0d850ecf1c40
பிரதமர் மோடி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: தூய்மையான, பாதுகாப்பான கழிப்பிட வசதி நாட்டின் பொதுச் சுகாதாரத்தில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

‘தூய்மை இந்தியா’ திட்டத்தால் இது சாத்தியமானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் பலன்களை முன்னிறுத்தும் ஆராய்ச்சி முடிவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தமது சமூக ஊடகப்பதிவில் தெரிவித்துள்ளார்.

‘நேச்சர்’ எனப்படும் பிரிட்டிஷ் வார அறிவியல் ஆய்விதழ் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரை ஒன்றின் இணைப்பை பிரதமரின் இந்தப் பதிவில் காண முடிகிறது.

‘தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பறை கட்டுமானம் மற்றும் இந்தியாவில் சிசு மரணம்’ என்ற தலைப்பிட்ட அந்த ஆய்வுக்கட்டுரையில் கடந்த 2014இல் ‘தூய்மை இந்தியா’ திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து கழிப்பறைகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுக்கழிப்பிட வசதி மேம்படுவதற்கும் சிசு, குழந்தை மரணங்களின் எண்ணிக்கை குறைவதற்கும் இடையில் முக்கிய தொடர்புள்ளது என்றும் அடித்தட்டு மக்கள் மற்றும் கீழ் நடுத்தர மக்களின் உடல்நலம் மேம்பட்டுள்ளது என்றும் ‘நேச்சர்’ கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தூய்மை இந்தியா’ திட்டத்தால் முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் பின்னாளில் நாட்டில் சிசு மரண விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் ஆண்டுதோறும் 70 ஆயிரம் சிசு மரணங்கள் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்