திருப்பதி: கூட்டம் அலைமோதுவதால் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் 24 மணி நேரத்துக்கும் மேல் காத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பதி கோவிலில் கடந்த சில நாள்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சனிக்கிழமை (ஜூலை 19) பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் தங்கி தரிசனத்திற்குச் செல்லும் வைகுந்தம் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டகைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்தவெளியில் உணவு சாப்பிட்டு தூங்குகின்றனர்.
இலவசத் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள சீலா தோரணம் வரை வரிசையில் காத்திருந்தனர்.
அவர்கள் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
வார இறுதி விடுமுறை நாள்களில் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால் இலவச தரிசனத்துக்கான நுழைவுச்சீட்டுகளைக் கூடுதலாக வழங்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) 73,093 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,570 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

