கேரள நீதிமன்றங்களுக்கு ‘மனித வெடிகுண்டு’ மிரட்டல்

1 mins read
7c1689fa-2594-4fa5-b276-0f08644d60c1
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காசர்கோடு நீதிமன்றக் கட்டடத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். - படம்: மனோரமா ஆன்லைன்

இடுக்கி: இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள சில நீதிமன்றங்களுக்கு ‘மனித வெடிகுண்டு’ மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது.

இடுக்கி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 8) பிற்பகல் 1.30 மணியளவில் வெடிப்பு நிகழும் என்று மின்னஞ்சல்வழி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தமிழ் விடுதலை இயக்கத்தின் (TLO) பெயரில் அந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

முகம்மது அஸ்லாம் விக்ரம் என்ற பெயரைத் தாங்கியிருந்த அந்த மின்னஞ்சல் தொடர்பில் காவல்துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. முட்டம் காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக அந்த நீதிமன்ற வளாகத்திற்குச் சென்று, பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதனிடையே, காசர்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கும் இதுபோன்ற மின்னஞ்சல்வழி மிரட்டல்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காசர்கோடு நீதிமன்றக் கட்டடத்தின் முக்கிய இடங்களில் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துடன் கூடிய நவீன வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் நண்பகல் உணவு நேரத்தின்போது அவை வெடிக்கும் என்றும் மிரட்டல் வந்தது. காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் வெடிபொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்ற வளாகத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து, அந்த மிரட்டல்கள் எங்கிருந்து விடுக்கப்பட்டன என்பது குறித்தும் அவற்றின் நம்பகத்தன்மை குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்