குஜராத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள வடோதராவில் நான்கு வயது சிறுமியான ரீட்டா தத்வி தன் அண்டைவீட்டுக்காரரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
சிறுமி அவரின் தாயாரின் கண்முன் வெட்டிச் சாய்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் ரத்தத்தை, தாந்திரீகர் என நம்பப்படும் அந்த அண்டைவீட்டு ஆடவர் பின்னர் தன் வீட்டில் இருந்த ஒரு சிறு கோயிலின் படிகளில் இட்டதாக ரீட்டாவின் தாயார் ஜோதி காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
பழங்குடியினர் அதிகம் இருக்கும் பகுதியான சோட்டா உதய்பூரில் இச்சம்பவம் திங்கட்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது.
தலையிலும் தொண்டையிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமியை வெட்டிய லாலோ ஹிம்மத் தத்வி கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இது நரபலி போல் தெரிகிறது. எல்லாம் சீக்கிரமாக நடந்ததால் சிறுமியின் தாயார் ஜோதியால் எதுவுமே செய்ய முடியவில்லை,” என்றார் காவல் அதிகாரி.
ஜோதி தமது வீட்டுக்கு அருகில் உள்ள தடம் ஒன்றைக் காலை 8.30 மணியளவில் கடந்து சென்றபோது அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ரீட்டாவைப் பின்னால் இருந்து திடீரென வந்த லாலோ தூக்கிக்கொண்டார்.
ரீட்டாவைத் தூக்கிக்கொண்டு லாலோ வேகவேகமாகத் தன் வீட்டை நோக்கி நடந்ததை ஜோதி கண்டார். உதவி கோரி அலறியதுடன் லாலோவைத் துரத்தினார் ஜோதி.
தனது வீட்டை அடைந்த லாலோ, கோடரி ஒன்றை எடுத்து ரீட்டாவின் தலையிலும் தொண்டையிலும் ஓங்கி வெட்டினார்.
“மகள் வெட்டிக் கொல்லப்பட்ட இந்த முழுச் சம்பவமும் அதிர்ச்சியில் பார்த்துக்கொண்டிருந்த ஜோதியின் கண்முன் நடந்தது,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் காவல் அதிகாரி தெரிவித்தார்.
லாலோ சிறுமியை நரபலி கொடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை.