பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலா பங்களாகுட்டா வனப்பகுதியில், சிறப்பு புலனாய்வுப் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, மீண்டும் சில மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலாவில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அங்குள்ள மஞ்சுநாதர் கோவிலில் பணியாற்றிய முன்னாள் துாய்மைப் பணியாளர் சின்னையா என்பவர் சில மாதகங்களுக்கு முன்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். மேலும், ஏராளமான பெண்கள் கோவில் நிலத்திலேயே புதைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, சிறப்புப் புலனாய்வுப் படை அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது. சின்னையா அடையாளம் காட்டிய இருபது இடங்களைக் காவல்துறையினர் தோண்டிப் பார்த்தபோது, பெரிதாக ஏதும் கிடைக்கவில்லை. இதனால் பொய்ப் புகார் அளித்ததாக சின்னையா மீது வழக்குப் பதிவானது. அவரைப் பின்னணியில் இருந்து இயக்கியதாக சிலர் விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு, தர்மஸ்தாலா பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சௌஜன்யா என்ற கல்லூரி மாணவியின் மண்டை ஓட்டை, சின்னையாவிடம் கொடுத்த அம்மாணவியின் மாமா விட்டல் கவுடா என்பவரும் விசாரிக்கப்பட்டார்.
அவரை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, மண்டை ஓடு கிடைத்ததாகக் கூறப்படும் இடத்தை அவர் அடையாளம் காட்டினார்.
மேலும், பல குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட, பங்களாகுட்டா வனப்பகுதியில் ஏராளமான எலும்புக்கூடுகள் சிதறிக்கிடப்பதைப் பார்த்ததாகவும் அவர் விசாரணையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர் குறிப்பிட்ட வனப்பகுதியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். காலை 11 மணிக்குத் தொடங்கிய சோதனை, மாலை 4 மணி வரை நடந்ததாகக் கூறப்படுகிறது.
சில இடங்களில் பள்ளம் தோண்டியபோது கிடைத்த பொருள்கள் அனைத்தும், சாக்குப் பைகளில் கட்டி வெளியே எடுத்து வரப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சோதனை நடவடிக்கையின்போது நிறைய எலும்புக்கூடுகள் சிக்கியதாகவும் அவற்றில் பல எலும்புக்கூடுகள் பள்ளம் தோண்டி எடுக்கப்பட்டவை அல்ல என்றும் கூறப்படுகிறது.
தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கை கிடைத்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.