புதுடெல்லி: போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான இந்திய அரசின் இடைவிடாத வேட்டை தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அண்மையில் டெல்லியில் ரூ.27.4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கைப்பற்றிய காவல்துறை ஐந்து பேரைக் கைது செய்துள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அமித்ஷா பதிவிட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் மூலம் மிகப் பெரிய போதைப்பொருள் கும்பலின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“போதைப்பொருள் தடுப்பு பிரிவு, டெல்லி காவல்துறை இணைந்து ஐந்து பேர் கொண்ட கும்பலைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.27.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
“இந்த நடவடிக்கையை மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, டெல்லி காவல்துறைக்கு பாராட்டுகள்,” என அமித்ஷா மேலும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் இல்லாத இந்தியா கட்டமைக்கப்படும் என்றும் அண்மையில் அமித்ஷா கூறியிருந்தார்.