பெங்களூரு: தாம்பத்தியத்தில் ஈடுபட மனைவி பணம் கேட்பதாக கணவர் காவல்துறையில் புகார் அளித்த விநோதம் பெங்களூரில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள வயாலிகாவல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். தனியார் நிறுவனத்தில் கணினிப் பொறியாளராகப் பணியாற்றி வரும் இவருக்கு கடந்த 2022ஆம் ஆண்டு பிந்துஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணமானது.
இந்நிலையில், திருமணமானது முதல் தனக்கும் மனைவிக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருவதாகவும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று தன் மனைவி கூறுவதாகவும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
மேலும், ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்றும் தன் விருப்பத்துக்கு மாறாகச் செயல்பட்டால் உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாக மனைவி மிரட்டுகிறார் என்றும் ஸ்ரீகாந்த் காவல்துறையில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக, தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார் பிந்துஸ்ரீ.
“தாம்பத்திய உறவு முக்கியம் என கருதினால் தனக்கு நாள்தோறும் ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்றும் விவாகரத்து வழங்க ரூ.45 லட்சம் வேண்டும் என்றும் என் மனைவி கூறுகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார் கணவர் ஸ்ரீகாந்த்.