ஜெய்ப்பூர்: தாம் வைத்த குழம்பு சுவையாக இல்லை என்று கூறியதால் கோபமடைந்த மனைவி, கணவரின் நாக்கைக் கடித்துத் துண்டாக்கினார்.
இந்த ‘கடி’ச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த விபின் குமார் என்பவர் ஆறு மாதங்களுக்கு முன்பு இஷா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
புதுமணத் தம்பதியர் இடையே அவ்வப்போது சிறு கருத்து வேறுபாடுகளும் வாக்குவாதங்களும் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பு முட்டைக்குழம்பு சமைத்துள்ளார் இஷா. ஆனால், அதைச் சுவைத்துப் பார்த்த கணவர் விபின் குமார், தாம் எதிர்பார்த்த அளவுக்குக் குழம்பு சுவையாக இல்லை என்று கூற, இஷாவுக்குக் கோபம் தலைக்கேறியது.
கணவர் மீது பாய்ந்த அவர், எதிர்பாராத வகையில் அவர் நாக்கைக் கடித்துத் துப்பியதாகக் கூறப்படுகிறது.
ஏறக்குறைய இரண்டரை சென்டி மீட்டர் அளவுக்கு நாக்கு துண்டிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சை செய்தாலும் அதை மீண்டும் ஒட்டவைக்க முடியாது என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். இதனால் விபினுக்குப் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் இஷாவைக் கைது செய்துள்ளனர்.


