பாலக்காடு: கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகக் கொங்காட் தொகுதியில் களமிறங்கிய கே.ஏ. துளசி வெற்றிபெற்றது அவரது குடும்பத்தை வெற்றிக் குடும்பமாக மாற்றியுள்ளது.
துளசியின் கணவர் வி.கே. ஸ்ரீகாந்தன் பாலக்காடு மக்களவைத் தொகுதி உறுப்பினர். அந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதுதான் கொங்காட் சட்டமன்றத் தொகுதி.
2024 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஸ்ரீகாந்தன் இந்தத் தேர்தலில் மனைவியின் வெற்றிக்காகப் பாடுபட்டார். அதற்குப் பலன் கிடைத்துள்ளது.
தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட இடசாரி ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் கே சாந்தகுமாரியை, கேஏ துளசி தோற்கடித்தார். சாந்தகுமாரி அந்தத் தொகுதியின் எம்எல்ஏ என்பதால் போட்டி மிகவும் கடுமையாக இருந்தது.
திங்கட்கிழமை (மே 4) வாக்குகள் எண்ணப்பட்டு, துளசி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபோது ஊடகங்களின் பார்வை அவரை நோக்கித் திரும்பியது.
கணவர் எம்பியாக இருக்கும் நிலையில் மனைவி எம்எல்ஏவாக வெற்றி பெற்ற தருணத்தை அவ்விருவரும் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டாடினர்.
தமது வெற்றியில் கணவரின் அயராது உழைப்பும் அடங்கி இருப்பதாகச் செய்தியாளர்களிடம் துளசி கூறினார்.
செளமியா அன்புமணி
தமிழ்நாட்டிலும் அப்படி ஒரு வெற்றித் தம்பதியினர் உள்ளனர். பாமக தலைவர் அன்புமணி, மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நிலையில், அவரது மனைவி செளமியா அன்புமணி தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட தவெகவின் எம். சிவனை 20,301 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டபோது உடன்பாட்டின்படி, பாமக தலைவர் அன்புமணிக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டது. அதன்படி, சென்ற மாதம் (ஏப்ரல்) 6ஆம் தேதி அவர் பதவி ஏற்றார். ஒரு மாதத்திற்குள் அவரது மனைவி எம்எல்ஏவாக வென்றுள்ளார்.
அதேபோல, மேகாலயா மாநில முதல்வராக கொன்ராட் சங்மா உள்ள நிலையில் அவரது மனைவி மெஹ்தாப் சங்மா எம்எல்ஏவாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

