மங்களூரு: கர்நாடகாவின் மங்களூரு புறநகரின் வளசில் கிராமத்தில் மனைவி பிரிந்து சென்றதால் கோபமடைந்த கணவர், தனக்குப் பெண் பார்த்துக் கொடுத்த தரகரைக் கொலை செய்துள்ளார்.
மங்களூரைச் சேர்ந்த 50 வயதான சுலைமான், திருமணத் தரகர் வேலை பார்த்துவந்தார்.
இதே பகுதியில் வசிக்கும் முஸ்தபா என்பவருக்குப் பெண் பார்த்து திருமணம் செய்துவைத்தார்.
திருமணமான சில நாள்களிலேயே தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன்காரணமாக மனைவி கணவனைப் பிரிந்து தன் தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.
தன்னுடன் வாழ வரும்படி முஸ்தபா மன்றாடியும் அவர் வரவில்லை.
தனக்கேற்ற பெண்ணைப் பார்த்து திருமணம் செய்யவில்லை எனத் தரகர் சுலைமான்மீது முஸ்தபா கோபம் கொண்டார்.
அவரைக் கைப்பேசியில் அழைத்து வசைப்பாடியுள்ளார். இதற்கிடையே, சமாதானப் பேச்சுவார்த்தைக்காகத் தன் மகன்கள் ரியாப், சியாப் ஆகியோருடன் முஸ்தபா வீட்டுக்கு சுலைமான் சென்றார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் சுலைமான் கழுத்தில் முஸ்தபா குத்தினார். அவரைக் காப்பாற்ற வந்த அவரது மகன்களையும் காயப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
அக்கம்பக்கத்தினர், காயமடைந்த மூவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். வழியிலேயே சுலைமான் உயிர் பிரிந்தது.