தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கணவன் - மனைவி சண்டையால் விமானம் தரையிறக்கம்

1 mins read
f529465e-ada8-4195-b055-5f7f42816c2e
கோப்புப்படம்: - ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஜெர்மனியின் மியூனிக் நகரிலிருந்து தாய்லாந்தின் பேங்காக் நோக்கிச் சென்ற லுஃப்தான்சா விமானம், கணவன் - மனைவி சண்டையால் டெல்லிக்குத் திருப்பிவிடப்பட்டது.

இச்சம்பவம் நவம்பர் 27ஆம் தேதி புதன்கிழமை நிகழ்ந்தது.

“விமானத்தில் பயணம் செய்த கணவனும் மனைவியும் எதற்காகச் சண்டை போட்டனர் என்பது தெரியவில்லை. ஆனால், அவர்களது சண்டையால்தான் எல்எச்772 என்ற அவ்விமானம் டெல்லிக்குத் திருப்பிவிடப்பட்டது,” என்று டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாக ‘ஏஎன்ஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் விமானம் தரையிறங்கியதும் ஜெர்மனியைச் சேர்ந்த ஆண் பயணி மட்டும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார். பின்னர் அவர் தமது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக லுஃப்தான்சா தெரிவித்தது.

“அவரை இந்திய அமலாக்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பதா அல்லது அவரை மன்னித்து, ஜெர்மனிக்குத் திரும்ப அனுமதிப்பதா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை,” என்று விமானப் போக்குவரத்து தலைமை இயக்கக அதிகாரி ஒருவர் கூறினார்.

அதன் தொடர்பில் இந்தியாவிலுள்ள ஜெர்மானியத் தூதரகத்துடன் ஒத்துழைத்து வருவதாகவும் அந்த அதிகாரி சொன்னார்.

முதலில் அவ்விமானத்தைப் பாகிஸ்தானில் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது என்றும் ஆனால் என்ன காரணத்திற்காகவோ அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

சென்ற மாதம், டெல்லிக்குப் புறப்பட்ட எகிப்திய ஏர் நிறுவனத்தின் விமானத்தின் சில இருக்கைகளை ஆண் பயணி ஒருவர் சேதப்படுத்தினார். சக பயணிகளுடன் சண்டையிட்ட அவர், டெல்லியில் விமானம் தரையிறங்கியதும் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் மேல்விசாரணைக்காக டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்