புதுடெல்லி: சமையல், துணிதுவைத்தல் போன்ற வீட்டு வேலைகளைக் கணவரும் செய்ய வேண்டும் என்றும் மனைவியை வேலைக்காரிபோல் நடத்தக்கூடாது என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அதிரடித் தீர்ப்பளித்தது.
திருமணம் என்பது ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கே தவிர, வீட்டு வேலைகளைச் செய்வதற்கு ஒரு வேலைக்காரியை அமர்த்துவதற்காக அன்று என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மனைவி தம்மைக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி, விசாரணை நீதிமன்றத்தின்மூலம் கணவர் மணவிலக்கு பெற்றார். ஆனால், அதனைக் கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது.
அதனை எதிர்த்து, கணவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, “நீங்கள் ஒரு வேலைக்காரியைத் திருமணம் செய்யவில்லை; ஒரு வாழ்க்கைத் துணையைத்தான் மணந்துள்ளீர்கள். இன்றைய காலகட்டம் மாறிவிட்டது. நீங்களும் சமைப்பது, துணிதுவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் உதவ வேண்டும்,” என்று நீதிபதி சந்தீப் மேத்தா குறிப்பிட்டார். அந்தத் தம்பதிக்கு 2017ல் திருமணம் நடந்து, எட்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது.
கணவர் அரசுப் பள்ளி ஆசிரியராகவும் மனைவி கல்லூரி விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்தனர். அவர்கள் இருவரும் 2029ஆம் ஆண்டிலிருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மணவிலக்கு கோரி கணவரே வழக்கு தொடுத்தார். திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆனதும் தம் மனைவியின் நடத்தை மாறிவிட்டதாகவும் அவர் தம்மை கண்ணியமின்றி நடத்தத் தொடங்கியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். தம்மையும் தம் பெற்றோரையும் தம் மனைவி கீழ்த்தரமாகப் பேசியதோடு, தங்களுக்காகச் சமைக்க மறுப்பதாகவும் அவர் சொன்னார்.
ஆனால், அக்குற்றச்சாட்டுகளை மறுத்த மனைவி, பிறந்த வீட்டிலிருந்து நகையும் பணமும் பெற்றுவருமாறு தம் மாமனாரும் மாமியாரும் வற்புறுத்தியதாகவும் குற்றம் சுமத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, கணவன் - மனைவிக்கு இடையிலான சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனால், ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த விசாரணையின்போது இருவரும் நேரில் முன்னிலையாக வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களுடன் நேரடியாகப் பேச விரும்புவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

