கணவன் பேசாமல் இருப்பது கொடுமை ஆகாது: மூன்றாண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

கணவன் பேசாமல் இருப்பது கொடுமை ஆகாது: மூன்றாண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

படம்: தினத் தந்தி

06 Jun 2026 - 8:09 pm

2 mins read

புதுடெல்லி: கணவன் மனைவியுடன் பேசாமல் இருப்பது மட்டுமே வன்கொடுமை அல்லது கொடுமையாகாது என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் கணவனுக்கு விதிக்கப்பட்டிருந்த மூன்றாண்டு சிறைத் தண்டனையையும் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கணவன் 13 நாள்கள் தன்னிடம் பேசாத காரணத்தால் மனமுடைந்த மனைவி, தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனைவி தனது உயிரை மாய்த்துக்கொள்ளத் தூண்டியதாகக் கணவனுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கணவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தற்காலிக மௌனம் குற்றமல்ல

இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

“தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளின்போது தற்காலிக மவுனம் காப்பதும் சில நாள்கள் பேசாமல் இருப்பதும் திருமண வாழ்க்கையின் ஒரு இயல்பான பகுதியாகும். கணவன் மனைவியுடன் பேசாமல் இருப்பது என்பது மட்டுமே கொடுமையாகிவிடாது.

“இந்த வழக்கில், கணவர் 13 நாள்கள் மனைவியிடம் பேசவில்லை என்ற ஒரே குற்றச்சாட்டின் அடிப்படையில், அவருக்குக் கீழமை நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. எனவே, அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது.

“ஒரு நபரைக் குற்றவாளி என்று தண்டிப்பதற்கு, அவரது நடத்தையானது அந்தப் பெண்ணை தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு மிகவும் தீவிரமானதாகவும் கட்டாயமானதாகவும் இருக்க வேண்டும்.

“இந்திய தண்டனைச் சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம் ஆகியவற்றின்கீழ், பேசாமல் இருப்பது மட்டுமே கொடுமைக்கான ஆதாரமாகக் கருதமுடியாது.

“மனைவியின் மனநலம் கடுமையாகப் பாதிக்கப்படும் வகையில் கணவன் வேண்டுமென்றே வன்மத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே அது வன்கொடுமை ஆகும்,” என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்