ஹைதராபாத்: கொலை மிரட்டல் விடுத்தது, மோசடி உள்ளிட்ட புகார்கள் எழுந்ததையடுத்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெகன்மோகன் ராவ் கைது செய்யப்பட்டார்.
அவருடன் மேலும் நால்வரை தெலுங்கானா மாநில சிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
தெலுங்கானா கிரிக்கெட் சங்கத்தின் பொதுச்செயலாளர் குருவா ரெட்டி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவருக்கான தேர்தல் நடந்தது. அதில் போலி ஆவணங்களை அளித்து ஜெகன்மோகன் ராவ் போட்யிட்டதாகவும் கிரிக்கெட் சங்கத்தின் ரூ.232 கோடி நிதியை அபகரித்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார் குருவா ரெட்டி.
மேலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்போது, நிறைய டிக்கெட்டுகளை இலவசமாகக் கேட்டு ஹைதராபாத் அணிக்கு கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெகன்மோகன் ராவ் அழுத்தம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது.
கடந்த மார்ச் 27ம் தேதி லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது, கூடுதலாக 20 டிக்கெட்டுகளை கொடுக்க வேண்டும் என்று ஹைதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மிரட்டியதாக ஹைதராபாத் அணி நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதையடுத்தே காவல்துறையில் புகார் அளிக்க நேர்ந்ததாக குருவா ரெட்டி கூறினார்.
கடந்த மாதமே ஹைதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது மோசடி, ஏமாற்றுதல், போலி ஆவணங்களை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெகன்மோகன் ராவ், பொருளாளர் ஸ்ரீனிவாஸ், தலைமைச் செயல் அதிகாரி சுனில் காந்தே உள்ளிட்டோர் கைதாகி உள்ளனர்.

