தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாய்க்கடிக்கு அஞ்சி 3வது மாடியிலிருந்து குதித்த உணவு விநியோக ஊழியர் உயிரிழப்பு

1 mins read
65cdcc45-0312-4a49-966a-63de71ca8112
சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்த முகம்மது ரிஸ்வான், 23. படம்: டுவிட்டர்/சையது ரஃபி -

ஹைதராபாத்: வாடிக்கையாளரின் வளர்ப்பு நாயிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காக கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்த 'ஸ்விக்கி' உணவு விநியோக நிறுவன ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சோக சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் நிகழ்ந்தது.

கடந்த புதன்கிழமை பஞ்சாரா ஹில்ஸ் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசித்துவரும் ஷோபனா என்பவரது வீட்டிற்கு உணவு விநியோகம் செய்யச் சென்றார் முகம்மது ரிஸ்வான் என்ற அந்த 23 வயது இளையர்.

கதவைத் திறந்ததும் அவ்வீட்டினுள் இருந்த வளர்ப்பு நாய் ரிஸ்வானை விரட்டியது. பயந்துபோன ரிஸ்வான், நாயிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டார். அதனால், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை அங்குள்ள நிஸாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்த்தார் ஷோபனா.

ரிஸ்வானின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அவரது உயிர் பிரிந்தது.

இதனையடுத்து, ஷோபனாவின் கவனக்குறைவே ரிஸ்வான் உயிரிழக்கக் காரணம் எனக் கூறி, அவரின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் காவல்துறை ஷோபனாமீது வழக்கு பதிந்துள்ளது.

இதற்கிடையே, தங்களது தொலைபேசி அழைப்புகளை ஷோபனா தவிர்த்து வருகிறார் என்றும் மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்தவும் அவர் தயாராக இல்லை என்றும் ரிஸ்வானின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ரிஸ்வானை இழந்து வாடும் தங்களுக்கு ஷோபனா இழப்பீடு தரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.