மின்னல்வேகத்தில் இதயத்தைக் கொண்டு செல்ல உதவிய மெட்ரோ ரயில்

2 mins read
f3981799-eb5a-4b01-aaa5-71862134bca5
சிறப்பு மெட்ரோ ரயிலில் இதயத்தைப் பத்திரமாகக் கொண்டு சென்ற மருத்துவக் குழுவினர். - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக 13 நிமிடத்தில் இதயத்தைக் கொண்டு செல்ல ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவை உதவி உள்ள தகவல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

ஹைதராபாத்தின் எல்பி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து லக்டிகபூல் பகுதியில் உள்ள மருத்துவமனையில் உள்ள ஒருவரின் உயிரைக் காப்பாற்ற வேகமாக இதயத்தைக் கொண்டு செல்ல வேண்டிய அவசரம் ஏற்பட்டது.

வேறொருவரிடம் இருந்து எடுக்கப்பட்ட இதயம் சில நிமிடங்களுக்கே செயல்படும். இரு மருத்துவமனைகளுக்கும் இடைப்பட்ட தூரம் 13 கிலோமீட்டர். காரில் வேகமாகச் சென்றால்கூட போக்குவரத்து நெரிசலைக் கடந்து செல்ல வெகுநேரமாகும்.

கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க என்ன செய்வது என்று மருத்துவக் குழுவினர் யோசித்தபோதுதான் மெட்ரோ ரயில் சேவை நினைவுக்கு வந்தது.

உடனடியாக அவர்கள் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் உதவியை நாடினர். உடனடியாக சம்மதித்த நிர்வாகம், மெட்ரோ ரயிலில் இதயத்தை வேகமாகக் கொண்டு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் மின்னல் வேகத்தில் செய்தது.

அதற்காக மெட்ரோ ரயில் தடம் பச்சைப் பாதையாக மாற்றப்பட்டது. அந்தப் பாதையில் உள்ள 13 ரயில் நிலையங்களிலும் நிற்காமல் ரயில் விரைந்து சென்றது. வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) இரவு 9.30 மணியளவில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

13 நிமிடங்களில் குறிப்பிட்ட மருத்துவமனையை அடைந்ததும் இதயமாற்று அறுவை சிகிச்சை வேகமாக நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது.

இதற்கான ஒருங்கிணைப்புத் திட்டம் துல்லியமாக நடத்தப்பட்டு வெற்றி பெற்றதாக மருத்துவக் குழுவினர் அறிவித்தனர். உரிய நேரத்தில் உதவ முன்வந்த ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்