புதுடெல்லி: இந்தியாவின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான முன்னோடித் திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது.
அதற்கான பரிசோதனை நடவடிக்கைகளை ஏற்கெனவே தொடங்கி செயல்படுத்தி வருவதாக இந்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இந்தியப் போக்குவரத்துத் துறையின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் பெரும் சக்தியாக ஹைட்ரஜன் எரிபொருள் விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி நாட்டின் ஆற்றல் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் இந்திய அரசு மாற்று எரிபொருள் பயன்பாட்டைத் தீவிரமாக ஊக்குவித்து வருவதாக திரு கட்காரி தெரிவித்தார்.
நொய்டா-டெல்லி-ஆக்ரா உள்ளிட்ட பத்து வழித்தடங்களில் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனச் சோதனைகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
“போக்குவரத்துத் துறையின் எதிா்காலம் ஹைட்ரஜன்தான். அதேபோல் எதிா்காலத்தின் எரிபொருள் ஹைட்ரஜன்தான். இதைக் கருத்தில்கொண்டு, புனே-மும்பை, திருவனந்தபுரம்-கொச்சி, ஜாம்நகா்-அகமதாபாத், கிரேட்டா் நொய்டா-டெல்லி-ஆக்ரா உள்ளிட்ட பத்து வழித்தடங்களில் ஹைட்ரஜன் சோதனைகளை அமைச்சு மேற்கொண்டுள்ளது,” என்றார் திரு.கட்காரி.
மாற்று எரிபொருள், உயிரி எரிபொருள் துறையில் தொழில்நுட்பப் பாதுகாப்பு அடிப்படையில் இந்தியப் போக்குவரத்து துறை சிறப்பாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதுவே இந்த இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளில் ஐம்பது விழுக்காட்டை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முக்கியக் காரணியாக உள்ளது என்றார்.
தாம் மத்திய அமைச்சராக பொறுப்பேற்கும்போது, இந்திய வாகனத்துறையின் மதிப்பு ரூ.14 லட்சம் கோடியாகவும் உலக அளவில் இந்திய வாகனத்துறை 7வது இடத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்ட திரு கட்காரி, தற்போது இந்திய வாகனத்துறையின் மதிப்பு ரூ.22 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் உலக அளவில் இந்திய வாகனத்துறை 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
ஆண்டுதோறும் மூன்று லட்சம் பேருந்துகள் தேவைப்படும் நிலையில், இந்தியாவில் 80,000 பேருந்துகள் மட்டுமே தயாரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
இந்தியப் போக்குவரத்துத் துறையினா் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிக வருவாயை ஈட்டித்தருவதாகவும் 4.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர் என்றும் திரு கட்காரி மேலும் தெரிவித்தார்.
நாட்டில் ஒவ்வோா் ஆண்டும் ஐந்து லட்சம் விபத்துகளும் 1.80 லட்சம் உயிரிழப்புகளும் ஏற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விபத்துகளால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று விழுக்காடு இழப்பு ஏற்படுகிறது என்றார். இந்த விபத்துகளில் உயிரிழப்போரில் 66 விழுக்காட்டினர், 18 முதல் 36 வயது வரையிலானவா்கள் என்றார் அவர்.

