‘எனது ஐந்து ரூபாயை இழந்துவிட்டேன்’: பரவலான பேருந்துப் பயணியின் பதிவு

‘எனது ஐந்து ரூபாயை இழந்துவிட்டேன்’: பரவலான பேருந்துப் பயணியின் பதிவு

1 mins read
8c6128ae-c1cd-4b1b-8e19-6ae0f78aba04
அரசுப் பேருந்தில் பயணம் செய்ததை உறுதிப்படுத்தும் வகையில் இணையம் வழியாகப் பயணச்சீட்டின் படத்தைப் பகிர்ந்தார் பாதிக்கப்பட்ட பயணி. - படம்: நித்தின் கிருஷ்ணா / எக்ஸ்

பெங்களூரு: அரசுப் பேருந்தில் பயணி ஒருவருக்கு நேர்ந்த அனுபவம் இப்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

நித்தின் கிருஷ்ணா என்ற அந்தப் பயணி, கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் அரசுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்தபோது, அதன் நடத்துநர் ஐந்து ரூபாய் சில்லறை தரவில்லை எனத் தமது எக்ஸ் ஊடகப் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளார்.

“நடத்துநரிடம் ஒரு ரூபாய்கூட சில்லறை இல்லாததால் நான் என்னுடைய ஐந்து ரூபாயை இழந்துவிட்டேன். இதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா?” என்று தமது பதிவு வழியாக பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்திடம் (பிஎம்டிசி) நித்தின் கேட்டுள்ளார்.

“பயணம் தொடங்கும் முன்னரே நடத்துநர்களுக்குப் போதுமான சில்லறை வழங்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல், இணையம் வழியாகக் கட்டணம் செலுத்த வழிவகை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் எனது பணத்தை இழக்க வேண்டுமா? அல்லது இப்படிக் குறுக்குவழியைப் பயன்படுத்தி நடத்துநர்கள் காசு பார்க்கிறார்களா?” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இப்பதிவு இணையத்தில் வெகுவேகமாகப் பரவ, இணையவாசிகள் அதுகுறித்து விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், “உங்களது புகார் பதிவுசெய்யப்பட்டுவிட்டது,” என்று பிஎம்டிசி அதிகாரி ஒருவரும் நித்தினின் பதிவிற்குப் பதிலளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்