கோல்கத்தா: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை (எஸ்ஐஆர்) தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தாமே நேரில் முன்னிலையாகி மக்களுக்காக வாதாடப்போவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்க மாநில வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்க தொழில்நுட்பம் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாக குறறஞ்சாட்டினார்.
ஜனநாயகப் பாதுகாப்பு அரண்களை பலவீனப்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவையும் முறைசாரா மின்னிலக்கத் தளங்களையும் பயன்படுத்தி வாக்காளர் பட்டியிலில் இருந்து பெயர்களை நீக்குவது தன்னிச்சையாக நடைபெறுவதாக அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் காரணமாக பலர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போவதாக முதல்வர் மம்தா தெரிவித்தார்.
“வழக்கறிஞராக அல்லாமல் ஒரு சாதாரண குடிமகளாக உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாதாட அனுமதி கோர இருக்கிறேன். தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்துக்கு நேரில் செல்வேன்,” என்றார் மம்தா பானர்ஜி.
எனினும் மேற்குறிப்பிட்ட மனுவை அவர் தலைமையேற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக தாக்கல் செய்கிறாரா அல்லது மாநில அரசு சார்பாக தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

