தர்மசாலா: திபெத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா இன்னும் 40 ஆண்டுகள் உயிர் வாழ்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருக்கு வயது 90.
தர்மசாலா அருகே உள்ள தலாய் லாமா கோயிலில் அவருடைய 90வது பிறந்த நாள் விழா ஜூலை 6ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, தலாய் லாமா நீண்ட காலம் வாழ்வதற்கான பிரார்த்தனை ஜூலை 5ஆம் தேதி நடைபெற்றது.
இதில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா காண்டு, புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய தலாய் லாமா, “பல தீர்க்க தரிசனங்களைப் பார்க்கும்போது, அவலோகிதேஸ்வரரின் ஆசீர்வாதம் எனக்கு இருப்பதாக உணர்கிறேன். இதுவரை மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். இன்னும் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு உயிர் வாழ்வேன் என நம்புகிறேன். இதுவரை உங்கள் பிரார்த்தனைகள் பலன் அளித்துள்ளன,” என்றார்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலா அருகே உள்ள கோயிலில் தலாய் லாமாவின் 90வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவருடைய நீண்ட ஆயுளுக்காக ஜூலை 5 பிரார்த்தனை நடைபெற்றது.
இதற்கிடையே தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளில், 1.4 பில்லியன் இந்தியர்களுடன் சேர்ந்து நானும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அவர் அன்பு, கருணை, பொறுமை மற்றும் ஒழுக்கத்தின் நீடித்த அடையாளமாக இருந்து வருகிறார்,” என்று மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

