ரூ.167.20 கோடிக்கு விற்பனையான ரவி வர்மாவின் ஓவியம்

ரூ.167.20 கோடிக்கு விற்பனையான ரவி வர்மாவின் ஓவியம்

2 mins read
a666737f-161e-4330-bfc2-7f5ec254a1e2
ரூ.167.20 கோடிக்கு விற்பனையான ரவி வர்மாவின்  ‘யசோதையும் கிருஷ்ணனும்’ ஓவியம். - படம்:ஆர்ட்ஸ்டி.நெட்

புதுடெல்லி: உலகப் புகழ்பெற்ற ஓவியா் ராஜா ரவி வா்மாவின் ‘யசோதையும் கிருஷ்ணனும்’ ஓவியம் ரூ.167.20 கோடிக்கு (யுஎஸ்17.9 மில்லியன் டாலர்) ஏலத்தில் விற்பனையானது.

தைல வண்ணத்தில் (ஆயில் பெயிண்ட்) வரையப்பட்ட அந்த ஓவியம் ஆக அதிக விலைக்கு விற்கப்பட்ட இந்திய ஓவியம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

புதுடெல்லியில் புதன்கிழமை (ஏப்ரல் 2) நடந்த ஏலத்தில், சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் டாக்டா் சைரஸ் எஸ். பூனாவாலா அந்த ஓவியத்தை வாங்கினார்.

“தேசிய பொக்கிஷம்” என்று அந்த ஓவியத்தை வர்ணித்த அவர், ஓவியம் பொதுமக்கள் பார்வைக்கு அவ்வப்போது வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

இதற்கு முன்னர் எம்.எஃப். ஹுசேன் வரைந்த கிராம் யாத்ரா ஓவியம் ரூ.118 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானதே சாதனையாக இருந்தது. அதை ராஜா ரவி வா்மாவின் ஓவியம் முறியடித்துள்ளது.

நவீன இந்திய ஓவியக்கலையின் தந்தை எனப் போற்றப்படும் ராஜா ரவிவர்மா, கேரளத்தின் திருவிதாங்கூா் அரச குடும்பத்தைச் சோ்ந்தவர். இந்தியாவின் ஓவியக் கலை மரபுக்கும் ஐரோப்பிய கலைக்கல்வியியல் தொழில்நுட்பத்துக்கும் இடையே பாலம் அமைத்தவர். கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்கு முன்னர், 1890களில் வரையப்பட்ட அந்த ஓவியம், ரவிவர்மாவின் நுணுக்கமான கலைத்திறனைப் பறைசாற்றுகிறது.

பாலகிருஷ்ணருக்கும் அவரின் தாய் யசோதைக்கும் இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியம் அமைந்துள்ளது.

யசோதை பசுவிடம் பால் கறப்பதையும், கிருஷ்ணர் அருகில் கிண்ணத்தை ஏந்தியவாறு பார்த்துக்கொண்டிருப்பதையும் சித்திரிக்கும் இந்த ஓவியம் ரவி வா்மாவின் சிறந்த ஓவியங்களில் ஒன்று.

தேசிய செல்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ள ரவிவர்மாவின் ஓவியங்களை, இந்தியச் சட்டப்படி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியாது. இந்தியர்களிடமே விற்கமுடியும்.

வரலாற்று, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இந்திய ஓவியங்களுக்கு சேகரிப்பாளர்கள் அதிக விலை கொடுக்கத் தயாராக இருப்பதை இந்த விற்பனை காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்