இடுக்கி: நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தது போன்ற அனுபவத்தைப் பெற்றனர் இந்தியாவின் கேரள மாநிலம், தொடுப்புழாவிலுள்ள விமலா பொதுப் பள்ளி மாணவர்கள்.
அண்மையில் அங்கு நடந்த மாணவர் நாடாளுமன்றத் தேர்தலில், பொதுத் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது அதன் உச்சகட்டம்.
தேர்தலில் வென்ற மாணவர்கள், சிறப்பு விருந்தினரான இடுக்கி மாவட்டத் துணை ஆட்சியர் அருண் எஸ் நாயர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டது இன்னும் சிறப்பு.
கடந்த ஜூன் 21ஆம் தேதி பள்ளி நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. அதற்கடுத்த நாள்களில் வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு திரும்பப் பெறுதல் போன்ற நடைமுறைகள் இடம்பெற்றன.
பின்னர் ஜூன் 27ஆம் தேதி மாணவ வேட்பாளர்கள் நேர்காணலில் பங்கேற்றனர். அதில், தேர்தலில் வென்றால் பள்ளிக்கு என்ன செய்வோம் என்பதை அவர்கள் பட்டியலிட்டனர். மற்ற மாணவர்கள் அவர்களிடம் கேள்வி கேட்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
பதாகைகளை ஏந்தி, பரப்புரை செய்து, வாக்கு சேகரிக்கவும் மாணவ வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மறுநாள் ஜூன் 28ஆம் தேதியன்று மூன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் வாக்களித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பள்ளியின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 13 பேர் போட்டியில் இருக்க, 1,000 மாணவர்கள் வாக்களித்தனர்.
“தேர்தல் நடைமுறையை அறிமுகப்படுத்தி, பள்ளிப் பருவத்திலேயே ஜனநாயகத்தின், தேர்தலின் முக்கியத்துவத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்குடன் இவ்வாண்டு மாணவர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது,” என்று பள்ளி முதல்வர் எலிஸ் கூறினார்.

