புதுடெல்லி: கடந்த 2024ஆம் ஆண்டு வரலாற்றிலேயே ஆக வெப்பமான ஆண்டாக அமைந்தது. உலகளாவிய வெப்பநிலை, முந்தைய காலத்தைவிட சராசரியாக 1.55 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
அவ்வாண்டின் 365 நாள்களில் 314 நாள்கள் கடும் வெப்ப அலைகள், வெள்ளம், சூறாவளி, வறட்சி ஆகியவற்றை இந்தியா எதிர்கொண்டது.
2024ல் புதுடெல்லி தனது வரலாற்றிலேயே இல்லாத உச்சபட்ச வெப்பநிலையான 49.9 டிகிரி செல்சியசைத் தொட்டது.
மேலும், 2023ஆம் ஆண்டைவிட மூன்று வாரங்களுக்கு முன்பே வெப்ப அலை வீசத் தொடங்கிவிட்டது. 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலை முழுமையாக பூமி எட்டுவதற்கு முன்பே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்நிலையை பூமி எட்டிவிட்டால், இந்தியாவில் வெப்பம் தொடர்பான வருடாந்தர இறப்புகள் 2100ஆம் ஆண்டிற்குள் 25 மடங்கு அதிகரிக்கக்கூடும். ஆண்டுக்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகலாம்.
பொருளியல் பாதிப்புகள் ஏற்கெனவே கண்கூடாகத் தெரியத் தொடங்கிவிட்டன. ஒரு டிகிரி வெப்பநிலை உயர்வுகூட சலவை தொழிலில் ஈடுபடுவோர், உணவு விற்பனையாளர்கள், கட்டுமான ஊழியர்கள் போன்ற தலைநகரின் முறைசாரா தொழிலாளர்களின் தினசரி வருமானத்தை 16 விழுக்காடு குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெப்ப அலைகளின்போது, இந்த வருமானம் 40 விழுக்காடு வரை குறையக்கூடும்.
பருவமழை என்பது இந்தியாவின் உணவு, நீர் அமைப்புகளின் முதுகெலும்பாகும்.
‘பிஎல்ஓஎஸ் கிளைமெட்’ (PLOS Climate) சஞ்சிகையில் 2025ஆம் ஆண்டு நவம்பரில் வெளியான ஆய்வின்படி, 1951 முதல் இந்தோ-கங்கை சமவெளிப் பகுதிகளில் சராசரி பருவமழை ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் ஒரு நாளில் 0.5 முதல் 1.5 மிமீ வரை ஏற்கனவே குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், 1.5°C வெப்பமயமாதலில் உள்ள மிகப்பெரிய ஆபத்து மழை குறைவது அல்ல, மாறாக ஒழுங்கற்ற, கணிக்க முடியாத மழைப்பொழிவுதான். உதாரணமாக, குஜராத்தின் கடலோரப் பகுதிகள் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் 0.15 மிமீ வரை கூடுதல் மழையைக் காண்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அறிவியல் உண்மைகள் தெளிவாக உள்ளன. அவை எச்சரிக்கை மணியையும் அடித்துள்ளன. சில இடங்களில் ஆபத்தான முறையில் கணிக்க முடியாத அளவுக்கு மழையையும், மற்ற இடங்களில் கடுமையான வறட்சியையும் சந்திக்கலாம்.
2024ஆம் ஆண்டில் மட்டும் காலநிலைப் பேரழிவுகளால் 5.4 மில்லியன் இந்தியர்கள் உள்நாட்டிலேயே வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

