புதுடெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் நெருக்கடியான சூழல் நீண்ட காலத்துக்குத் தொடர்ந்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை அரசாங்கம் உயர்த்த வேண்டியிருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் செவ்வாய்க்கிழமை (மே 12) நடைபெற்ற அனைத்துலக மாநாடு ஒன்றில் பேசிய அவர், ஹோர்முஸ் நீரிணை முடக்கம், மத்திய கிழக்குப் போர் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு எரிசக்தி விலை உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
எரிசக்தி, உர இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள இந்தியாவையும் இந்தத் தடங்கல்கள் பாதிக்கத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தப் பிரச்சினை தொடர்ந்தால், விலை உயர்வின் ஒரு பகுதியை இந்திய அரசாங்கம் அந்நாட்டு மக்கள் மீது சுமத்துவது காலத்தின் கட்டாயம் என்று அவர் கூறினார்.
பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் போர் தொடங்கிய போதிலும், இந்திய அரசாங்கம் இதுவரை சில்லறை எரிபொருள் விலையை உயர்த்தவில்லை. இதற்கிடையே, அந்நியச் செலாவணியைச் சேமிக்க எரிபொருள், சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து 95க்கும் கீழ் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

