கோழிகளை மலைப்பாம்பு விழுங்கியதால் இழப்பீடு தரும்படி கோரிக்கை

கோழிகளை மலைப்பாம்பு விழுங்கியதால் இழப்பீடு தரும்படி கோரிக்கை

02 Jun 2023 - 6:05 pm

1 mins read

தாம் வளர்த்துவந்த கோழிகளை மலைப்பாம்பு ஒன்று விழுங்கிவிட்டதால் கோழிகளுக்குரிய பணத்தை இழப்பீடாகத் தரவேண்டுமெனக் கேட்கிறார் இந்திய ஆடவர் ஒருவர்.

கேரள மாநிலம், வெள்ளரிக்குண்டில் அண்மையில் மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில் அமைச்சர் அகமது தேவர்கோவில், மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காசர்கோட்டைச் சேர்ந்த கே.வி.ஜார்ஜ், 2022 ஜூன் மாதம் ஒருநாள் காலையில் தமது கோழிக்கூண்டைத் திறந்து பார்த்தபோது ஒரு கோழிகூட இல்லை என்றும் அதனுள் ஒரு மலைப்பாம்பு இருந்தது என்றும் கூறினார்.

கோழிகள் அனைத்தையும் மலைப்பாம்பு விழுங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதற்காக அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மலைப்பாம்பு குறித்து அவர் தகவல் அளித்ததும் வனத்துறையினர் வந்து அதனைப் பிடித்துச் சென்று காட்டிற்குள் விட்டனர். இந்த விவகாரத்தில் அவர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று திரு ஜார்ஜ் குறிப்பிட்டார்.

"மலைப்பாம்பு அரசாங்கத்திற்குச் சொந்தமெனில், கோழிகள் என்னுடையவை," என்பது அவரது வாதம்.

இதனையடுத்து, அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சரும் அதிகாரிகளும், நிலைமையை மதிப்பீடு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.