அமராவதி: தெலுங்கு தேசம் கட்சியின் (டி.டி.பி) விஜயநகரம் எம்.பி. காளிசெட்டி அப்பள நாயுடு மூன்றாவது குழந்தையைப் பெறும் பெண்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
மூன்றாவதாக பெண் குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.50 ஆயிரமும் ஆண் குழந்தை பெற்றெடுத்தால் பசு மாடும் பரிசாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அப்பள நாயுடுவின் இந்தச் சலுகை மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் இந்த முடிவைப் பாராட்டியுள்ளனர்.
மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில், பிரகாசம் மாவட்டம், மார்காபூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், “அனைத்துப் பெண்களும் முடிந்தவரை அதிகமான குழந்தைகளைப் பெறவேண்டும்.
“முதல் இரண்டு பிரசவங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பிரசவங்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்,” என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெளிவுபடுத்தி இருந்தார்.
இந்தச் சூழலில், அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர எம்.பி. காளிசெட்டி அப்பள நாயுடு, “ஒரு பெண் மூன்றாவது முறையாக பெற்றெடுக்கும் பெண் குழந்தைக்குத் தனது சம்பளத்தில் இருந்து ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிறக்கும் குழந்தை ஆண் எனில், ஒரு பசுவை வழங்குவதாகவும் அறிவித்தார்.
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட மூத்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், மாநிலத்தில் குறைந்து வரும் இளைஞர்களின் மக்கள் தொகை குறித்தும் அதை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசி வரும் நிலையில், அப்பள நாயுடுவின் அறிவிப்பு பேசுபொருளாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மேலும், மூன்றாவது குழந்தை பிறந்தால் நாங்கள் ஊக்கத்தொகை வழங்குவோம்,” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசிய அப்பள நாயுடு கூறினார்.
முதல் முறையாக எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பளநாயுடு, பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர்.
அடிப்படை நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து தெலுங்கு தேசம் கட்சியினருக்குப் பயிற்சி அளித்து வந்தார். 51 வயதான இவர் தெலுங்கு தேசம் கட்சியில் 25 ஆண்டுகளாக உள்ளார்.
இவர், விஜயநகரத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் வட ஆந்திரப் பயிற்சி நிறுவனத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.