ரூ. 10 கோடி தராவிட்டால் உன்னையும் கொன்று விடுவோம்: பாபா சித்திக் மகனுக்கு தாவூத் கொலை மிரட்டல்

1 mins read
de79d4f9-43fd-4777-ad43-d85f59a52920
ஜீசன் சித்திக் - படம்: இந்திய ஊடகம்

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட அம்மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் மகனிடம் ரூ.10 கோடி கேட்டு மர்ம கும்பல் ஒன்று கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

பாபா சித்திக்கின் கொலைச் சம்பவம் அம்மாநில அரசியலில் பெரிதாகப் பேசப்பட்ட நிலையில், அவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பர் என்பதால் திரையுலகிலும் அது எதிரொலித்தது.

இந்நிலையில், பாபா சித்திக்கின் மகன் ஜீசன் சித்திக்கிடம் ரூ.10 கோடி கேட்டு மர்ம கும்பல் ஒன்று மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. அடையாளம் தெரியாத ஒருவரின் மின்னஞ்சல் கணக்கிலிருந்து அது அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது.

மேலும், பணம் தராவிட்டால் உமது தந்தை பாபா சித்திக்கிற்கு என்ன நடந்ததோ அதுதான் உனக்கும் நடக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜீசன் சித்திக் உடனடியாக மும்பை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, அவரது வீட்டுக்குச் சென்று காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து இணையக் குற்றப்பிரிவு அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 3 நாள்களாகத் தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் ரூ.10 கோடி தராவிட்டால் தந்தையின் முடிவுதான் உனக்கு என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் ஜீசன் சித்திக் கூறினார்.

நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமுக்கு அக்கொலை மிரட்டலில் தொடர்பிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்