கியவ்: ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைப்பதனால் உக்ரேனில் நடக்கும் போர் முடிவுக்கு வந்துவிடாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உக்ரேனுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அவர், உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியையும் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவையும் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) சந்தித்துப் பேசினார்.
ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் ரஷ்யா- உக்ரேன் போருக்குப் பேச்சுவார்த்தை, தூதரக உறவு, கலந்தாலோசனை மூலமே தீர்வு காண முடியும் என்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
எண்ணெய், கனிமங்கள் அல்லது உரங்களை வாங்குவதாலோ நிறுத்தவதாலோ இப்பிரச்சினை தீராது என்றார் அவர்.
இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வது மிகப்பெரிய சவால். இதில் இந்தியா, உக்ரேன் நாடுகளின் கருத்துகளை மதிப்பது முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராகத் தடைகள் விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்தியா தன் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்று எக்ஸ் சமூக ஊடகத்தளத்தில் உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார்.
நியாயமற்ற இந்தப் போர் முடிவுக்கு வர உலக வல்லரசுகள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு மத்தியிலும், இந்தியாவின் முதன்மை கச்சா எண்ணெய் விநியோகிப்பாளராக ரஷ்யாவே நீடிக்கிறது. இந்தியாவின் 88 விழுக்காடு கச்சா எண்ணெய்த் தேவையில் மூன்றில் ஒரு பங்கினை ரஷ்யா வழங்குகிறது.
ரஷ்யா மீதான ஐரோப்பிய நாடுகளின் பொருளியல் தடைகளுக்குப் பிறகு, அந்நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தியா, சீனா போன்ற ஆசிய சந்தைகளே முக்கிய ஆதரவாக விளங்கி வருகின்றன.


