புதுடெல்லி: புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக சென்ற 2023 ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்து கெடு விதித்திருந்தது. அதனையடுத்து, ஏராளமானோர் தங்களிடம் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்தினர். இதன் மூலம் புழக்கத்தில் இருந்த 98.47 விழுக்காட்டு நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்தது.
இந்நிலையில், ரூ.2,000 நோட்டுகளை வைத்திருந்தால் இப்போதும் மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது. அந்த வங்கியின் 19 வட்டார அலுவலகங்களிலும் அனைத்து வங்கிக் கிளைகளிலும் அந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பணத்தை அஞ்சல் மூலமாக அனுப்பினால் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்காக இந்த நோட்டுகளைச் செலுத்தலாம். இதற்கு வரம்பு எதுவும் இல்லை என்றும் அந்த வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கிகளில் நோட்டுகளை மாற்றும்போது அடையாளச் சான்று கட்டாயம்.

