பெங்களூரு: ஐஐஎம் பெங்களூரு கல்வி மையம் அறிமுகப்படுத்திய மேலாண்மை முதுகலைப் பட்டப்படிப்பான ‘பிஜிபி’, ஃபைனான்சியல் டைம்ஸ் மாஸ்டர்ஸ் இன் மேனேஜ்மென்ட்’ (MIM) 2026 தரவரிசையில் உலக அளவில் 21வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதற்கு முன்பு 2025ல் 28வது இடத்திலும் 2024ல் 41வது இடத்திலும் இருந்தது. இதன்மூலம் உலகின் முன்னணி மேலாண்மைத் திட்டங்களில் ஒன்றாகத் தனது நிலையை மேலும் ஐஐஎம் வலுப்படுத்தியுள்ளது. இது இரண்டு ஆண்டுகால முதுகலைப் படிப்பாகும்.
இதன்மூலம் உலகளாவிய 25 சிறந்த மேலாண்மை நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியக் கல்வி நிறுவனம் என்ற பெருமையை ஐஐஎம் பெங்களூரு பெற்றுள்ளது. மேலும், இந்திய அளவிலான தரவரிசையில் தனது முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளது.
மாணவர்களின் வேலைவாய்ப்பு, உயர் ஊதியம், தொழில்சார் வளர்ச்சி, தொழில்முறை ஆலோசனைகள் போன்ற முக்கியக் காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை உயர்வு சாத்தியமாகி உள்ளது.
இதில் நிறுவனத்தின் ‘தொழில் வளர்ச்சி தரவரிசை’ 90ல் இருந்து 69 ஆகவும் ‘தொழில்முறை சேவை தரவரிசை’ 11ல் இருந்து 8ஆகவும் முன்னேறியுள்ளன.
உலகளாவிய பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளின் தரத்தை மேம்படுத்தி வருவதற்குக் கிடைத்த அங்கீகாரமே இந்த உயர்வு என்று ஐஐஎம் பெங்களூரின் பொறுப்பு இயக்குநர் பேராசிரியர் யு. தினேஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் மாணவர்களின் உலகளாவிய கூட்டமைப்பு தரவரிசையில் 19வது இடத்தையும் கல்விக்கான கட்டண மதிப்பு அடிப்படையில் 65வது இடத்தையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


