சென்னை: சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல மர தளவாட நிறுவனமான இக்கியா (IKEA), இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
சென்னை, புனேவில் பெரிய கடைகளைத் திறக்க இக்கியா முடிவு செய்துள்ளது. அதற்காகச் சென்னையில் மெட்ரோ வசதியுள்ள இடங்களில் 4-5 ஏக்கர் நிலம் அல்லது 3,000 சதுர அடிக்கு குறையாத கட்டடத்தைத் தேடி வருகிறது.
இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி, இளையர்களின் தேவையை மையமாக வைத்து, குருகிராம், நொய்டாவில் வணிக மையங்களை அமைக்க ரூ.7,500 கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளது.
பெரிய கடைகள், சிறிய நகரக் கிளைகள்,இணையவழி வணிகம் எனப் பல வழிகளில் விற்பனையை இக்கியா முன்னெடுத்து வருகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில், உள்நாட்டுப் பொருள்கள் கொள்முதலை 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஏற்கெனவே பெங்களூரு, ஹைதராபாத்தில் இக்கியா செயல்பட்டு வரும் நிலையில், டெல்லியில் சிறிய அளவிலான விற்பனை நிலையத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

