புதுடெல்லி: இந்தியாவில் சட்டவிரோத சூதாட்டச் செயலிகள் மூலம் ஏராளமான முதலீட்டாளர்களின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ததுடன் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
தற்போது 1xBet நிறுவனத்துக்கு எதிரான பண மோசடி வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பில் பல நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடம் அமலாக்கத் துறை ஏற்கெனவே விசாரணை நடத்தியது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) முன்னிலையாக வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிமி சக்கரவர்த்திக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) முன்னிலையாக வேண்டும் என நடிகை ஊர்வசி ரவுதேலாவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 22 கோடி பேர் சூதாட்டச் செயலிகளைப் பயன்படுத்துவதாகவும் இதில் பாதிப் பேர் தொடர்ந்து அதனைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.