சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சுற்றுச்சூழல் துறை முன்னாள் அதிகாரி பாண்டியன், அவருடைய நெருங்கிய தொடர்பில் இருந்த, தொழில் அதிபர்களின் வீடு, அலுவலகம் என, 10க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (மே 6) திடீர் சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் பாண்டியன் 60. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள, சுற்றுச்சூழல் துறை இயக்குநரகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
இவரது வீடு, சென்னை, சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ளது. கடந்த 2020 டிசம்பரில், லஞ்ச ஒழிப்பு போலிசார், அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, 1.37 கோடி ரூபாய் ரொக்கம், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், வெள்ளி பொருள்கள் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
போலிஸ் விசாரணையில், அவர் அதிக அளவில் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. உடனடியாக, இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின், ஓய்வு பெற்றார்.
தற்போது, பாண்டியன் விவகாரத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். பாண்டியனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, தொழில் அதிபர்களின் பட்டியலையும் தயாரித்துள்ளனர்.