சென்னை: கடந்த 2024ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறைகளில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகளை மேற்கொண்டதாகக் கூறி, 4,975 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
போலி முகவர்களாலும் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாலும் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதில் கடும் சிரமம் நிலவுவதாகப் பயணிகள் தொடர்ந்து புகாரளித்து வந்தனர்.
இதனையடுத்து, அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க இந்திய ரயில்வே கடும் நடவடிக்கையில் இறங்கியது.
அதன்படி, இந்தியா முழுவதும் ரயில்வே போலிப் பயணச்சீட்டு முகவர்கள்மீதும் கள்ளச் சந்தையில் பயணச்சீட்டு விற்பனை செய்வோர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வேயின் வணிகப் பிரிவு அதிகாரிகள், இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி நிறுவனம் ஆகியவை இணைந்து அத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பயணச்சீட்டு முகப்புகளில் கண்காணிப்புப் படக்கருவிகள் பொருத்தி, ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணச்சீட்டு வாங்குவோரைக் கண்காணித்து வருகிறோம். அதன்படி, சென்ற ஆண்டு இந்தியா முழுவதும் மேற்கொண்ட பல்வேறு கட்டச் சோதனைகளில், சட்டவிரோதமாகப் பயணச்சீட்டு முன்பதிவு செய்ததன் தொடர்பில் 4,725 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. பயணச்சீட்டு முன்பதிவு உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி 4,975 பேர் கைதுசெய்யப்பட்டனர்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரூ.53.38 கோடி (S$8.38 மில்லியன்) மதிப்புள்ள 124,529 பயணச்சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அவசரகாலப் பயணங்களுக்கான ‘தட்கல்’ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட முன்பதிவு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதால், 26,442 இணையத்தள முகவரிகளும் முடக்கப்பட்டன.