புதுடெல்லி: போர்ச்சூழலுக்கு மத்தியில், பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் கடன் வழங்க அனைத்துலக நாணய நிதியம் முடிவு செய்திருப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் இந்தியா புறக்கணித்துள்ளது.
தனக்குக் கிடைக்கும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதச் செயலுக்குப் பயன்படுத்துகிறது என்பதே இந்தியாவின் குற்றச்சாட்டாகும்.
இந்நிலையில், கடந்த நான்கு நாள்களுக்கு மேலாக இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் நிலவுகிறது.
பஹல்காம் தாக்குதலை அடுத்து, அனைத்துலக அரங்கில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது.
அதன் ஓர் அங்கமாக, உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இந்தியா முடிந்தவரை முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் தருவது தொடர்பாக முடிவெடுக்க அனைத்துலக நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கடந்த வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடத்தியது.
அதற்கு முன்னதாக, அனைத்துலக அமைப்புகளிடம் இருந்து பெறும் நிதியை ஜெய்ஷ்-இ-முகம்மது, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்காக பாகிஸ்தான் செலவிடுவதாக இந்தியா குற்றம்சாட்டியது.
தொடர்புடைய செய்திகள்
எனவே, ஐஎம்எஃப் அதன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், ஐஎம்எஃப் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
“அனைத்துலக நிதியத்திடம் இருந்து நீண்ட கால அடிப்படையில், கடன் வாங்கும் பாகிஸ்தான், அதன் திட்டங்களைக் கடைப்பிடிப்பதிலும் நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்துவது இல்லை.
“பாகிஸ்தானின் பொருளியல் நடவடிக்கைகளில் ராணுவத்தின் ஆதிக்கமும் தலையீடும் உள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருந்தும் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது,” என இந்தியா மேலும் கூறியுள்ளது.
வாக்கெடுப்பு முடிந்துவிட்டாலும், இந்தியா முன்வைக்கும் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படும் என ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.