பெங்களூரு: பெங்களூரில் உள்ள சின்னசாமி விளையாட்டு அரங்கத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பில் சட்டரீதியான விசாரணைக்கு கர்நாடக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியப் பிரிமியர் லீக் போட்டியில் வெற்றிபெற்ற பெங்களூரு அணிக்கு சின்னசாமி அரங்கில் பாராட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குப் போட்டிபோட்டுக்கொண்டு வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் மாண்டனர்.
சம்பவம் தொடர்பில் அடுத்த 15 நாள்களுக்குள் சட்டரீதியான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று உத்தரவிட்ட கர்நாடக முதலமைச்சர் திரு சித்தராமையா, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
“விசாரணையின் மூலம் சம்பவத்துக்கு யார் பொறுப்பு என்பது தெளிவாகத் தெரியவரும். கிரிக்கெட் சங்கமா, காவல்துறையின் கவனக்குறைவா அல்லது இதர நிர்வாகத் தவறுகளா என்பதை அறிய முடியும்,” என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இந்தியப் பிரிமியர் லீக் வெற்றியைத் தொடர்ந்து மாநில அரசாங்கம் நாடாளுமன்றத்திலும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சின்னசாமி விளையாட்டு அரங்கத்திலும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்ததாகத் திரு சித்தராமையா சொன்னார்.
“நாடாளுமன்றத்துக்கு வெளியே 1 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டபோதும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை,” என்ற அவர், “சின்னசாமி அரங்கில் ஒரு நேரத்தில் அதிகபட்சம் 35,000 பேர் வரைதான் ஒன்றுகூட முடியும். ஆனால் அரங்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர்,” என்றார்.
“அனுமதிச்சீட்டு உள்ளவர்கள் மட்டும்தான் அரங்கத்துக்கு வந்திருக்கவேண்டும். கூடுதலானோர் வந்தால் என்ன செய்ய முடியும்,” என்று திரு சித்தராமையா கேள்வி எழுப்பினார்.
கூட்ட நெரிசலில் 11 பேர் மாண்டதையும் 47 பேர் காயமுற்றதையும் அவர் உறுதிபடுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
இதுபோன்ற ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கக்கூடாது என்ற திரு சித்தராமையா மருத்துவமனைகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டோரைச் சந்தித்தார்.
அதேவேளை, அசம்பாவிதத்தை அரசியலாக்கப்போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.
முறையான ஏற்பாடுகள் இன்றி வெற்றிபெற்ற அடுத்த நாளே ஏன் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த திரு சித்தராமையா, சின்னசாமி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றார்.
பாதுகாப்புக்காக காவல்துறை அதிகாரிகளைப் பணியமர்த்துவதுதான் மாநில அரசாங்கத்தின் கடமை என்றார் அவர்.

