ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை உடனடியாக மீட்பது அவசியம்: ப. சிதம்பரம்

2 mins read
7087cdb1-46c7-4c67-8a6c-e46577cefdc6
ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கான முழு மாநில அந்தஸ்தை உடனடியாக மீட்டெடுப்பது இன்றியமையாதது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

“மக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முதல்வரையும் அரசாங்கத்தையும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், முதல்வருக்கு அதிகாரம் இல்லை,” என்று அவர் தமது ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் புதன்கிழமை (அக்டோபர் 23) ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசுவதற்காக அந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் காவல்துறையின் மூத்த அதிகாரிகளும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்றபோதிலும் மாநில முதல்வரோ அமைச்சர்களோ அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

அண்மையில் நடைபெற்ற ஜம்மு - காஷ்மீர் தேர்தலில் வெற்றிபெற்று ஒமர் அப்துல்லா முதல்வராகப் பதவி ஏற்றார்.

இருப்பினும் முதல்வர் இல்லாமல் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தை துணைநிலை ஆளுநர் மட்டும் தன்னிச்சையாக நடத்தி இருப்பதாக ப. சிதம்பரம் விமர்சித்து உள்ளார்.

அவர் தமது பதிவில், “ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தலைமையில் சட்டம் - ஒழுங்கு சூழல் குறித்த மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

“ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை.

“ஜம்மு - காஷ்மீருக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டவிதிமுறைகளின்படி காவல்துறை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

“மக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முதல்வரையும் அரசாங்கத்தையும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், முதல்வருக்கு அதிகாரம் இல்லை.

“அதனால்தான், ஜம்மு - காஷ்மீரை முழுமையான மாநிலம் இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே முழு மாநில அந்தஸ்தை உடனடியாக மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது,” என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்புச் சொற்கள்