புதுடெல்லி: வட இந்தியாவில் நிலவும் நச்சுப் புகையும் தூசுமூட்டமும் குடிமக்களை மூச்சுத் திணற வைப்பது மட்டுமல்லாமல் பலரின் உயிரைக் குடித்து பொருளியலிலும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
உலகின் மாசுபட்ட நகரங்களில் இந்தியாவின் தலைநகரான புதுடெல்லி அடிக்கடி இடம்பெறுவது வழக்கமாகி வருகிறது. ஒவ்வொரு குளிர்காலத்திலும் வாகனங்களும் தொழிற்சாலைகளும் கக்கும் புகையாலும் அண்டை மாநிலங்களில் வயல்வெளிகள் எரிக்கப்படுவதால் கிளம்பும் தூசியாலும் புதுடெல்லி புகைமூட்டத்தில் மூழ்குகிறது.
நவம்பரில் உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த வரம்பையும் மீறி தலைநகரில் புகைமூட்டம் 50 மடங்குக்கு அதிகரித்தது. இதனால் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நுண்துகள்கள் நுரையீரல் வழியாக ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
வடஇந்தியாவின் மோசமான காற்றுத் தூய்மைகேட்டால் அதன் பொருளியல் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆண்டுக்கு 95 பில்லியன் யுஎஸ் டாலர் (S$127 பில்லியன்) அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய மூன்று விழுக்காடு இழப்புகளை தூய்மைக்கேடு ஏற்படுத்துவதாக ஓர் ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
ஆனால் பொருளியலுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
“வெளிப்புறச் செலவுகள் மிக அதிக அளவில் இருக்கும்,” என்று எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதிப் பகுப்பாய்வு கழகத்தின் திருமதி விபூதி கார்க் தெரிவித்தார்.
டெல்லியைத் தளமாகக் கொண்டு செயல்படும் நீடித்த எதிர்கால ஒத்துழைப்புக்கான ஆய்வகத்தின் டாக்டர் பர்கவ் கிருஷ்ணா, ஒவ்வொரு கட்டத்திலும் செலவு கூடிக் கொண்டே போகிறது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“வேலைக்குப் போகாமல் இருப்பது, நாள்பட்ட நோய், அதனுடன் தொடர்புடைய உடல்நலச் செலவுகள், அகால மரணம் மற்றும் நபரின் குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கம் வரை தூய்மைக்கேட்டின் பாதிப்பு தொடர்கிறது,” என்றார் திரு கிருஷ்ணா.
பல ஆய்வுகள் சேதத்தை அளவிட முயற்சி செய்தன.
உலகளாவிய ஆலோசனை நிறுவனமான டால்பெர்க், 2019 ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டால் உற்பத்தி குறைந்து, வேலை இல்லாமை மற்றும் அகால மரணம் காரணமாக இந்திய வர்த்தகங்களுக்கு 95 பில்லியன் அமெரிக்க டாலர் செலவு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
இந்தத் தொகை, இந்தியாவின் வரவு செலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட மூன்று விழுக்காடு மற்றும் அதன் வருடாந்திர பொது சுகாதார செலவினங்களில் ஏறக்குறைய இரண்டு மடங்கு ஆகும்.