புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களே இதற்கு முக்கியக் காரணம் என அவ்வங்கி விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 விழுக்காடாக இருக்கும் என உலக வங்கி கணித்திருந்தது. வலுவான நுகர்வு வளர்ச்சி காரணமாக, இந்தியா உலக அளவில் வேகமாக வளரக்கூடிய பொருளியலாக விளங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளையில், அமெரிக்கா விதித்துள்ள 50 விழுக்காடு வரி காரணமாக, எதிர்வரும் 2027 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சியானது மீண்டும் 6.3 விழுக்காடாக குறையக்கூடும் என்றும் உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீள்தன்மை கொண்ட உள்நாட்டு தேவை, வலுவான கிராமப்புற மீட்சி, சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தம் ஆகியவை இந்தியப் பொருளியலுக்கு கைகொடுத்த அம்சங்கள் என உலக வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தெற்காசிய மேம்பாடு தொடர்பான அண்மைய அறிக்கையிலும் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
நடப்பாண்டில் தெற்காசியாவின் வளர்ச்சி 6.6 விழுக்காடாக இருக்கும் என்பதும் உலக வங்கியின் மற்றொரு கணிப்பாகும். எனினும், 2026ஆம் ஆண்டு இந்த வளர்ச்சி விகிதம் 5.8%ஆகக் குறையும் என்றும் அந்தக் கணிப்பு முன்னுரைக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வளர்ச்சி விகிதத்தைவிட இது 0.6% குறைவாகும்.
தொடர்புடைய செய்திகள்
நிச்சயமற்ற உலகளாவிய சூழல், சமூக-அரசியல் அமைதியின்மை, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படக்கூடிய தொழிலாளர் சந்தை சீர்குலைவுகள் ஆகியவற்றால் தெற்காசியா பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என்றும் உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.