புதுடெல்லி: மத்திய கிழக்குப் போரால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்பை அடுத்து, இந்திய விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
உலக அளவில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஏறக்குறைய 63 மில்லியன் டன் ரசாயன உரங்களைப் பயன்படுத்துகிறது.
இந்நிலையில், ரசாயன உரங்களின் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அந்நாட்டுக்கு கவலை அளித்துள்ளது.
ரசாயன உரத்தின் முக்கியமான மூலப்பொருளான ‘டை அமோனியம் பாஸ்ஃபேட்டின்’ இருப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருவதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்திய விவசாயிகள் பருவமழை நடவுப் பருவத்திற்குத் தயாராகி வரும் நிலையில், அங்கு கடந்த சில வாரங்களாக இயற்கை உரக் கலவையின் தேவை அதிகரித்துள்ளது.
வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பசுச்சாணம், சுத்திகரிக்கப்படாத சீனிக் கட்டிகள், மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி உயிரி உரத்தை உற்பத்தி செய்கின்றனர். இவ்வாறு மேலும் பல்வேறு வகையிலும் இயற்கை உரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
உத்தரப் பிரதேசத்தின் இயற்கை உர ஆலையை நடத்தி வருகிறார் 57 வயதான கம்லேஷ் தேவி. அம்மாநிலத்தில் உள்ள 92 கிராமங்களில் 1,050 பெண் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது அந்த ஆலை.
“சிறு விவசாயிகளுக்குப் பயனளிக்கும், மண் நலனை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்துச் சிந்தித்துச் செயல்படுகிறோம்,” என்கிறார் கம்லேஷ் தேவி.
தொடர்புடைய செய்திகள்
பாரம்பரிய முறைகள், முன்னணி நிபுணர்களின் ஆதரவுடன், உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டு உத்தரப் பிரதேசப் பெண்கள் உயிரி உரங்களைத் தயாரிக்கின்றனர்.
ரசாயன உரங்களைப் போலல்லாமல், உயிரி உரங்களில் உயிருள்ள நுண்ணுயிரிகள் உள்ளன, இவை மண்ணில் ஏற்கெனவே உள்ள ஊட்டச்சத்துக்களைத் தாவரங்கள் பயன்படுத்திக்கொள்ள உதவுகின்றன என்பதை அப்பெண்கள் நன்கு அறிந்துள்ளனர்.
வீட்டு வேலைகளைச் செய்வதற்கு மட்டுமே பெண்கள் என்ற நிலை மாறி, இன்று அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
உரத்தட்டுப்பாடு ஏற்படாது என இந்திய அரசு உறுதியளித்த போதிலும், விவசாயிகள் இடையே நிலவும் கவலை இயற்கைப் பொருள்களின் பக்கம் அவர்களின் பார்வையைத் திருப்பியுள்ளது.
யூரியா தட்டுப்பாடு காரணமாக, சில விவசாயிகள் அதைப் பதுக்கத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.
“எங்களிடம் முன்பு மண் வளம் இருந்தது. அது மீண்டும் வேண்டும் என்று விரும்புகிறோம்,” என்கிறார் தபால் சம்ரித்தி மஹிலா கிசான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான சுமன்.
அதற்கான பாதையை இயற்கை உரங்கள் அமைத்துக்கொடுக்கும் என நம்புவதாகவும் அவர் சொல்கிறார்.

