புதுடெல்லி: இந்தியத் தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ள நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானத்தைக் கொண்டுவர இண்டியா கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகாரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையின்போது ஏறக்குறைய 65 வாக்காளர்களின் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், உரிய ஆதாரங்கள் இன்றி குற்றச்சாட்டுகளை ஏற்க இயலாது எனத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
காங்கிரஸ் கட்சியின் எம்பியான ராகுல் காந்தி, ‘வாக்குத் திருட்டு’ மூலம்தான் பாஜக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக பகிரங்கமாகச் சாடினார். இதையும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்பதுடன், ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் கையெழுத்திட்ட பிரமாணப் பத்திரத்தை அளிக்க வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் கேட்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஏழு நாள்களுக்குள் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யாவிட்டால் ராகுல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அர்த்தமாகிவிடும் என்றும் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானாவில் மாநிலங்களில் வாக்குத் திருட்டு மூலமாகவே பாஜக தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் வாக்காளர் தரவுகளைத் தேர்தல் ஆணையம் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகக் கையாள்வதாகவும் ராகுல் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவர இண்டியா எதிர்க்கட்சிக் கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது, நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரிலேயே இத்தீர்மானத்தைக் கொண்டுவர ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பதவி நீக்க தீர்மானம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை என்று மாநிலங்களவை உறுப்பினரான சையத் நசீர் கூறினார். அதேசமயம், தேவைப்பட்டால் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் அனைத்து கருவிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.